மாஸ்க் போடாமல் சென்ற இளைஞரை கொடூரமாக தாக்கிய காவலர்கள் - வீடியோ வெளியானதால் பரபரப்பு!
கும்பகோணம் அருகே மாஸ்க் அணியாமல் சென்றுக் கொண்டிருந்த இளைஞரை போலீசார் தாக்கிய காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கும்பகோணம், நாச்சியார்கோவில் காவல் நிலையம் அருகே முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பிரபு (28) என்பவர் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
ஆனால், அவர் நிற்காமல் சென்றுள்ளார். உடனே, விரட்டிச் சென்று போலீசார் அவரை பிடித்தனர். அப்போது, காவலர் கலைச்செல்வனை, பிரபு தாக்கியதாகக் கூறி போலீசார் பிரபுவை கைது செய்தனர்.
இந்நிலையில், இளைஞர் பிரபுவை 6 போலீசார் ஒன்று சேர்ந்து அடித்து சித்திரவதை செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பிரபுவை 6 போலீசார் கொடூரமாக, காட்டுமிராண்டித்தனமாக அடித்துள்ளனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.