விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!
விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு 42 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இதில் மூத்த மகனான பூபதி கடந்த 2015ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.
தற்போது ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் 4ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த வாகன விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான பாலக்கோடு, கம்மாளப்பட்டிக்கு ராணுவ வாகனத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. உடலுக்கு முறையான சடங்குகள் செய்யப்பட்டது.
அதனையடுத்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி மற்றும் சார் ஆட்சியர் பிரதாப் மற்றும் ராணுவ அதிகாரிகள் பூபதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினர்.
பின்னர், அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றபட்டு இடுகாட்டிற்கு கொண்டு செல்லபட்டு, ராணுவத்தினர் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.