மாணவிகளுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஸ்பெண்ட்!
பேராசிரியர் கொடுத்த பாலியல் டார்ச்சரால் மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியராக ஸ்ரீலால் பாண்டியன் பணியாற்றி வருகிறார்.
இவர் மீது பிலோமினா நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர், வல்லம் டி.எஸ்.பியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், தனது மகள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார். அவரது அலைபேசி எண்ணிற்கு பேராசிரியர் ஸ்ரீலால் பாண்டியன் ஆபாச எம்.எம்.எஸ்களை அனுப்பிக்கொண்டு வருகிறார்.
என்னுடைய மகள் மட்டுமல்லா, ஆறு மாணவிகளுக்கும் இவர் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். பேராசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தனது மகள் மற்றும் அவரது தோழி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த புகாரைப் பதிவு செய்த வல்லம் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் தெரிந்ததும், பல்கலைக்கழக நிர்வாகம், ஸ்ரீலால் பாண்டியனை உடனே சஸ்பெண்ட் செய்துள்ளது.