திருச்சி அருகே பாஜக பிரமுகரை சரமாரி அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
திருச்சியில் முன் விரோதம் காரணமாக பாஜக நிர்வாகியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இந்நிலையில், தண்டபாணிக்கும், அவரது வீட்டு பக்கத்தில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகனுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்குள்ளம் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு தண்டபாணிக்கும், பாலமுருகனுக்கும் இடையே மீண்டும் தகராறு விஸ்வரூபம் எடுத்தது. அவர்களை அப்பகுதி மக்கள் சமாதானம் செய்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டிலிருந்து தண்டபாணி வெளியே வந்தார்.
அப்போது பாலமுருகன் ஓடி வந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தண்டபாணியின் கை மணிக்கட்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த தண்டபாணியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.