சாலையில் முகக்கவசம் அணியாத முதியவர்களைக் கண்டு காரை நிறுத்திய ஸ்டாலின்!
கொளத்தூர் அருகே முதியவர்கள் இரண்டு பேர் சாலையில் முகக்கவசம் அணியாமல் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காரிலிருந்து கீழே இறங்கிச் சென்று முகக்கவசத்தின் அவசியப் பற்றி எடுத்துக் கூறினார்.
கொளத்தூர் தொகுதியில் கொரோனா பணிகள் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின்பு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, அவரைப் பார்க்க ஏராளமானோர் சாலையில் இரு பகுதிகளிலும் நின்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சாலையில் வயதான தம்பதியினர் இருவர் முகக்கவசம் அணியாமல் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்த மு.க.ஸ்டாலின், காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார். அந்த முதியவர்கள் இருவரிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.
பின்னர், அவர்களிடம் முகக்கவசத்தின் அவசியம் பற்றி எடுத்துக்கூறி முகக் கவசத்தை அவர்களிடம் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கூறி விட்டு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.