ஊரடங்கால் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கொய்மலர்கள் அழுகி சேதம் - விவசாயிகள் வேதனை
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட கொய்மலர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி செய்யமுடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றன. பல லட்சம் மதிப்பிலான பூக்கள் கொய்மலர்கள் அழுகி சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, மலைகிராம விவசாயிகள் நிவாரணம் வழங்கிட தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, பூண்டி, கவுஞ்சி உள்ளிட்ட மலை கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பசுமை குடில்கள் அமைத்து கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் கொய்மலர்கள், சென்னை, பெங்களூர் மற்றும் மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 10 மலர்கள் கொண்ட 1 கொத்து பூக்கள் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் பிற மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனால், கொடைக்கானல் மலை கிராமங்களில் சாகுபடி செய்யும் கொய்மலர்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் பூக்கள் அழுகியும், குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கொய்மலர்கள் விவசாயம் செய்ய, மலை கிராம விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்யப்படுவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
இதனை, தமிழக அரசு கவனம் செலுத்தி கொய்மலர்கள் விவசாயம் செய்யும் மலைகிராம விவசாயிகளுக்கு நிவாரண தொகை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என மலைவாழ் கொய்மலர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.