மணலி அருகே பள்ளி வளாகத்தில் ரவுடி கொலை - 3 பேர் கைது
சென்னை, மணலி, பாடசாலை தெருவில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஊரடங்கால், பள்ளி பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து, பள்ளி காவலாளி முருகேசன், வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, பள்ளியின் பின்பக்க கட்டடத்தில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கை மற்றும் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து அங்கு சென்ற, மணலி காவல் ஆய்வாளர் சிட்டிபாபு தலைமையிலான போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், இறந்தவர் மணலி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சாக்கு என்ற சாக்ரடீஸ் (25) என்பதும், பள்ளி வளாக பின் பக்க மதில் ஏறி வந்து நண்பர்களுடன் கஞ்சா புகைத்த போது, தகராறு ஏற்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தனிப்படை அமைத்து, கொலை குற்றவாளிகளை தேடிய போலீசார், இன்று காலை கொருக்குபேட்டையில் பதுங்கியிருந்த பரத் (21), தினேஷ் குமார் (22), மணலியைச் சேர்ந்த அஸ்வின்குமார் (19), ஆகிய மூவரை கைது செய்தனர். விசாரணையில், மணலியைச் சேர்ந்த அஸ்வின்குமாரிடம், இறந்த சாக்ரடீஸ் கஞ்சா கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார்.
ஆத்திரமடைந்த அஸ்வின், பரத், தினேஷ்குமாருடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில், கஞ்சா புகைக்கும் போது சாக்ரடீசை வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். கொலையான சாக்ரடீஸ், கடந்த ஆண்டு ஜூலை மாதம், வியாசர்பாடியில் கல்லுாரி மாணவர் பிரசாந்த் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.