உதகை அருகே விவசாய நிலத்திற்கு வனத்துறையினர் வழி விட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
உதகை அருகே விவசாய நிலத்திற்கு வனத்துறையினர் வழி விட வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கூடலூர் சாலையில் T.R. பஜார் அருகே தலித் மக்களுக்காக சுமார் 350 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்கு அரசு நிலம் ஒதுக்கியுள்ளது.
ஆனால் இவர்களின் விவசாய நிலத்திற்கு செல்வதற்கு இடையே வனப்பகுதியில் 200 மீட்டர் தொலைவிற்கு வனப்பகுதி இருப்பதால், இந்த பகுதி வனத்துறையினர் கட்டுபாட்டில் உள்ளது.
இதனால் காலகாலமாக இவர்கள் சென்று வந்த இந்த பாதையானது, கடந்த ஒரு மாதமாக வனத்துறையினர் பாதையின் நடுவே பள்ளங்களை தோண்டியும், மரக்கன்றுகளை நட்டு வைத்தும் விவசாயிகள் சென்று வர தடை செய்துள்ளனர். இதனால் விவசாய நிலத்திற்கு இவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தேயிலைத் தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுமைகளை சுமந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க வனத்துறையினர் பாதையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அங்குள்ள சில தனியார் தேயிலை எஸ்டேட் நிறுவனங்கள் வனத்துறையினருக்கு ஆதரவு தெரிவித்து, பொது வழியை விடாமல் தடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, வனத்துறை அமைச்சர் உரிய விசாரணை மேற்கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையாதவாறு வழி அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.