2 நாட்களில் தடுப்பூசி தீர்ந்து விடும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இதனையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இதனால், தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு அதிகம் உள்ளது.
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகள் தற்போது காலியாகியுள்ளதாகவும், தடுப்பூசி கையிருப்பில் எதுவும் இல்லை என்றும் தடுப்பூசி மையங்கள் அறிவித்துள்ளன.
தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் பேசியதாவது -
தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் இருக்கிறது. 2 நாட்களில் அதுவும் தீர்ந்து விடும்.
25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில், 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டும்தான் வந்திருக்கின்றன.
மத்திய அரசு 12 லட்சம் தடுப்பூசி தர வேண்டும்.இன்னும் அவை வரவில்லை. தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.