ஒரு சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு இன்று முதல் அமல் - தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகி வருகிறது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 10ம் தேதி முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. ஆரம்பக் கட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அப்போதும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இதனையடுத்து, கடுமையான ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது.
காய்கறி, பழங்கள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு கூட தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. இத்தகைய கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு அறிவிப்பு நேற்றோடு முடிவடைந்தது.
இந்நிலையில், வரும் ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. கடந்த 7 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. அதே நடைமுறை அடுத்த 7 நாட்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து கடைகளும் ஒரே நாளில் திறக்காமல் ஒரு நாளைக்கு ஒரு பகுதியில் உள்ள கடைகள் மட்டுமே திறந்திருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில்லறை விற்பனைக்கு அனுமதி இல்லை.
இந்த முறை கோயம்பேடு மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மொத்த காய்கறி, பூ சந்தைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சில்லரை வணிகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை மேற்கொள்ளவும் அத்தியாவசிய தேவைகளுக்காக தொலை தொடர்பு துறை, அஞ்சல் துறை ஊழியர்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மளிகைக் கடை வியாபாரிகள் அந்தந்த பகுதி ஆட்சியர்களின் அனுமதியுடன் தள்ளுவண்டிகளில் பொருட்களை விற்கலாம் என்றும், டோர் டெலிவரி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த தளர்வுகளுடன் நீடிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.