கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டி படுகொலை!
கஞ்சா புகைப்பதில் மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மணலி பாடசாலை தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் வாட்ச்மேன் முருகேசன், செடிகளுக்கு தண்ணீர் பிடிக்க சென்றபோது, ரத்த காயங்களுடன் பள்ளி வளாகத்தில் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணலி ஆய்வாளர் சிட்டிபாபு தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாதவரம் துணை ஆணையர் கிருஷ்ணராஜ் விசாரணையை துரிதப்படுத்தினார்.
விசாரணையில் மணலி அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்த சாக்கு என்கிற சாக்ரடீஸ் (25). இவர் மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொலை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இளைஞர் இறந்த இடத்தில் கஞ்சா பொட்டலங்கள், மது பாட்டில்கள் இருந்ததால் கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
கீழ்ப்பாக்கத்தில் இருந்துவந்த சீபா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் மிக சுலபமாக கஞ்சா பொட்டலங்கள், மது பாட்டில்கள் சரளமாக மணலி பகுதியில் விற்பனை நடைபெறுவதாகவும், ஊரடங்கில் பூட்டிய பள்ளிக்குள் கொலை நடந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், போலீசார் ரோந்து பணிகளை துரிதப்படுத்தி, சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, சந்தேக அடிப்படையில் இருவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,