மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் உயிரிழந்தார்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் உயிரிந்தார்.
மைதிலி சிவராமன் (81) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராராகவும், ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவராகவும் இருந்தவர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1939ம் ஆண்டு மைதிலி சிவராமன் பிறந்தார். இவர் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தவர். 1966-ம் ஆண்டு முதல் 68ம் ஆண்டு வரை ஐநாவின் உதவி ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார். அதன் பிறகு, பாஸ்போர்ட் இல்லாமல் கியூபாவுக்குச் சென்றார். அந்நாட்டின் கம்யூனிசத் தாக்கத்தால், இந்தியா திரும்பினார்.
இந்தியா வந்ததும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். இவர், கீழ்வெண் மணி துயரத்தை நேரில் சென்று விசாரித்து ஆங்கிலத்தில் தொடர் கட்டுரை எழுதினார். இந்த கட்டுரையால் அவர் அப்போது பெரிதும் பரபரப்பாகப் பேசப்பட்டார்.
வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தினார். அவர்களுக்கு பல உதவிகளையும் செய்தார்.
மறைந்த மைதிலி சிவராமன், கணவர் கருணாகரன், மகள் கல்பனா கருணாகரன் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மைதிலி சிவராமனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.