தொடரும் பாலியல் தொல்லை - தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
தமிழ்நாட்டில் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களின் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் எழுந்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்கள் விவகாரம் வெளியானதிலிருந்து பல மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியுலகிற்கு சொல்ல முன்வந்திருக்கிறார்கள்.
பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து சென்னையிலுள்ள பல தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பிரபல தடகள பயிற்சியாளரான நாகராஜன் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது. இவர் மத்திய அரசின் ஜிஸ்டி வரி கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர், சென்னை பிரைம் என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இங்க பயிற்சி வரும் வீராங்கனைகளுக்குப் பாலியல் ரீதியாக சீண்டி வந்துள்ளார். குறிப்பாக, 17 வயது கொண்ட ஏழை வீராங்கனை சிறுமிகளைக் குறி வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
பிசியோதெரபி பயிற்சி கொடுப்பதாக கூறி நாகராஜன் என்னை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியுள்ளார் என்று அந்த சிறுமி போலீசில் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து, போலீசார் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இத்தகவலை அறிந்த நாகராஜன் அதிகப்படியான தூக்க மாத்திரைகளைப் போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அவரைப் பிடித்த காவல் துறையினர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். சிகிச்சை முடிந்த பிறகு அவரைக் கைது செய்த போலீசார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். விசாரணை செய்த நீதிபதி முகமது ஃபரூக் நாகராஜனுக்கு 12 நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார். இதன் பின்பு நாகராஜன் சிறையில் அடைக்கப்பட்டார்.