தொடரும் நடிகைகளின் கடும் எதிர்ப்பு - வைரமுத்துவுக்கு விருது கொடுக்கப்படுமா? ஓ.என்.வி திடீர் அறிவிப்பு

tamilnadu-samugam
By Nandhini May 28, 2021 10:19 AM GMT
Report

மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது கேரளாவில் வழங்கப்படும். ஆனால், முதன்முறையாக இந்த விருது கேரளாவை சேராத கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கவிஞர் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்பட்டதற்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த நடிகை பார்வதி, கவிஞர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கபட்டதற்காக எதிர்ப்பு தெரிவித்தார். 

இது குறித்து நடிகை பார்வதி தனது டுவிட்டர் பதிவில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில், ‛ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர். ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. அவரது சிறந்த பணியால் எங்களது இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளது. ஆனால், பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் #MeToo உச்சத்தில் இருந்தபோது பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு புகார் கூறினார். இதையடுத்து பெண் பத்திரிகையாளர் உள்பட 17 பேர் வைரமுத்து மீது #MeTooவில் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இது எதுவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில், மலையாளத்தில் சிறந்த கவிஞரும், பாடலாசிரியருமான ஓ.என்.வி. பெயரில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. ஐந்தாம் ஆண்டுக்கான விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பார்வதியை தொடர்ந்து அஞ்சலி, ஜீத்து, ரிமா கல்லிங்கல் உள்ளிட்ட பலரும் இதையே காரணமாக சொல்லி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாடகி சின்மயியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், ஓ.என்.வி. அகாடமி திடீரென்று இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடுமையான எதிர்ப்பு வருவதால் வைரமுத்துவுக்கு விருது கொடுக்கலாமா? திரும்ப பெறலாமா? என்பது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.