இராமநாதபுரம் மாவட்டத்தில் வீசிய சூறாவளி காற்றால் படகு கடலில் மூழ்கி சேதம்!

tamilnadu-samugam
By Nandhini May 27, 2021 05:33 AM GMT
Report

மேற்குவங்கம் நோக்கிச் சென்ற ‘யாஸ் புயல்’ கரையை கடக்கும்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் சூறாவளி காற்று பலமாக வீசியது. இந்த சூறைக்காற்றால் 72 மின் கம்பங்களும், 58 மரங்களும் வேரோடு சாய்ந்தது.

இந்த சூறைக்காற்று கடற்கரையோர கிராமங்களில் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியது. சூறைக் காற்றின் வேகத்தால் கடல் அலைகள் ஆர்ப்பரித்தது. அலையின் வேகத்தால் நங்கூரமிட்டு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. சில படகுகள் நீரில் மூழ்கியது.

இந்தநிலையில், இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் அருகேயுள்ள வேப்பமரத்துப்பனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் தேவசகாய ஜேம்ஸ் செல்வராஜ் என்பவரின் படகு கடலில் மூழ்கி சேதமானது. படகு மூழ்கியதால் அதிர்ச்சியடைந்த மீனவர் ஜேம்ஸ் உறவினர்களை அழைத்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்துள்ளார்.

சேதமடைந்த படகின் மதிப்பு ரூபாய் 3 லட்சம் எனவும், வலைகள் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மீனவர் தேவசகாயம் ஜேம்ஸ் செல்வராஜ் இந்த படகை மட்டுமே மூலதனமாக கொண்டு தனது குடும்பத்துடன் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்த நிலையில், அந்த படகும் கவிழ்ந்து சேதமானதால் நிலைகுலைந்து மிகுந்த வேதனையுடன் உள்ளார்.

ஆகவே, வாழ்விழந்து தவிக்கும் மீனவரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், தமிழக மீன்வளத்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மீனவருக்கு உரிய இழப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வீசிய சூறாவளி காற்றால் படகு கடலில் மூழ்கி சேதம்! | Tamilnadu Samugam