பழனியில் மாம்பழம் விளைச்சல் அமோகம் - விற்பனையாகாததால் விவசாயிகள் கவலை
பழனி சுற்று வட்டார கிராமங்களான ஆயக்குடி, கோவில்பட்டி, அய்யம்புள்ளி, வரதாபட்டினம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மாம்பழம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செந்தூரா, மல்கோவா, கல்லாமணி, கிரேப், சீலா உள்ளிட்ட மாம்பழ வகைகள் பழனி பகுதியில் விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மாம்பழ சீசன் துவங்கி உள்ள நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் விளைச்சல் கிடைத்துள்ளது. விளைச்சல் அதிகளவில் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகளுக்கு கொரோனா ஊரடங்கு பேரிடியாக வந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக சந்தைகள் மூடப்பட்டதால் விளைவிக்கப்பட்ட மாம்பழங்களை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வியாபாரிகள் யாரும் மாம்பழத்தை வாங்க முன்வராத காரணத்தால் மரத்திலிருந்து மாம்பழங்களை விவசாயிகள் பறிக்காமலேயே விடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை விளைச்சல் கிடைக்கக்கூடிய மாம்பழத்தை இந்த ஆண்டு விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஏக்கருக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மா மரங்களைப் பராமரித்த நிலையில் தற்போது மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக மாம்பழம் விளைச்சல் குறித்த தகவலைச் சேகரித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடமிருந்து எழுந்துள்ளது.