யாஸ் புயல் எதிரொலி - வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள் - 50க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடும் பாதிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் யாஸ் புயல் எதிரொலியாக பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைச்சேதம் ஏற்பட்டது.
மழையால் சேதமடைந்த கீரிப்பாறை தரைப்பாலம், பள்ளம் மீனவ கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பகுதிகளையும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பார்வையிட்டு போதுமான உதவிகள் செய்வதாகவும் உறுதியளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், தற்போது யாஸ் புயல் எதிரொலியாக இடை விடாமல் தொடர்ந்து கனமழை நேற்று முதல் இன்று வரையில் பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் உட்பட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
சில குளங்களில் உடைப்பு ஏறுபட்டுள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கீரிப்பாறை பகுதியில் உள்ள தரைப்பாலம் மழை தண்ணீர் காரணமாக அடித்து செல்லப்பட்டதால் அங்குள்ள 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதேபோன்று ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். இதனை நேரில் சென்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பார்வையிட்டார்.
ஏற்கனவே அப்பகுதியில் நிரந்தர பாலம் கட்ட அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அப்பணியை உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்வதாகவும், அப்பகுதியினரிடம் உறுதி கூறினார். மேலும் திருப்பதிசாரம் பகுதியில் ஏற்பட்ட சேதங்களையும் பார்வையிட்டார்.
இராஜாக்கமங்கலம் - பறக்கை சாலையில் ஆற்றில் இருந்து அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டதோடு, அப்பகுதியினரை தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தார்.
பள்ளம் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டதோடு அங்குள்ள மீனவர்கள் தங்க வைக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கும் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் உடனடியாக மின்சார பணிகளையும் சேதமடைந்த பகுதிகளை சரி செய்யவும், அரசை வலியுறுத்துவதாக அப்பகுதியினருக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் உறுதியளித்தார்.