டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னைக்கு வந்தன!
டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் முகக்கவசங்கள், மருத்துவ கருவிகள், ஆக்ஜிசன் செரிவூட்டிகள் உள்ளிட்ட 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம், தமிழக அரசின் போா்க்கால தீவிர நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் வெகுவாக குறைந்துள்ளது. ஆனாலும், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை முற்றிலுமாக தடுப்பதில் தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
அதோடு அரசுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகள், தொழிற்சாலைகளும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. இதற்கு தேவையான கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதோடு தமிழகத்திற்கு தேவையான ஆக்ஜிசனை தமிழகத்திலேயே கூடுதலாக உற்பத்தி செய்யவும், வெளிநாடுகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியிலிருந்து நேற்று மாலை இந்திய விமானப்படை தனி விமானம் ஒன்று சென்னை பழைய விமானநிலையம் வந்தது. அதில் 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தன. அதில் முகக்கவசங்கள், மருத்துவ பரிசோதனை கருவாகள், ஆக்ஜிசன் செரிவூட்டிகள் வந்தன.
ஏா் இந்தியா லோடா்கள், விமானப்படை வீரா்கள் கண்காணிப்பில் அந்த பாா்சல்களை விமானத்திலிருந்து இறக்கினா். அதன் பின்பு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அந்த மருத்துவ உபகரணங்களை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் வாகனம் மூலம் சென்னையில் உள்ள ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா்.