அரசியல் ஆதாயத்திற்கு ஜாதிப் பிரச்னையாக்க முயற்சி நடக்கிறது : கமல்
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம், அரசியல் ஆதாயத்திற்காக ஜாதிப் பிரச்னையாக்க முயற்சி நடக்கிறது என்று கமல் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
ஆசிரியரே, மாணவியரிடம் அத்துமீறிய, பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முன்னரே புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம், இதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு, கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குலைக்கிறது. இதையடுத்து, மற்ற பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் புகார், அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதற்காக, தனி குழுவை நியமித்து, விசாரிக்க வேண்டும். கண்ணை இமை காப்பது போல், நம் கண்மணிகளை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளோம். 'ஆன்லைன்' வசதிகளை பிள்ளைகள் கையாளும்போது, பெற்றோர் கவனமுடனும், பிள்ளைகளின் அச்சத்தை போக்கி, துணையாகவும் இருக்க வேண்டும்.
இப்பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதிப் பிரச்னையாக்கும் முயற்சி, பல தரப்பிலும் நடக்கிறது. இது, குற்றவாளிகளுக்கே சாதகமாகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள், யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.