மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளிலேயே தடுப்பு செலுத்த இந்த எண்ணை அழைக்கவும் - ககன்தீப் சிங் பேடி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகளவில் பரவி வருகிறது. நாள் தோறும் தொற்றால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்புச் எடுத்துக் கொள்வதால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மாற்று திறனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான உதவி எண்ணை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு -
மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டார். அதன் படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மையங்களிலும் முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள காணொளி மூலமாக பதிவு செய்யலாம். 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற எண் மூலமாக மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும்.
வீட்டில் இருந்து வெளியே வர முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளிலேயே தடுப்பு செலுத்தப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 118 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.