கொரோனாவை விரட்ட செங்கம் அருகே கிராம மக்கள் செய்த வினோத வழிபாடு!
செங்கம் அருகே கொரோனா தொற்று வராமல் தடுக்க கிராம மக்கள் அம்மன் ஆலயத்தில் வினோத வழிபாடு செய்தனர்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை அதிகளவில் பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பீதி அடைந்த கிராம மக்கள் கோயில் வினோத வழிபாடு ஒன்றை நடத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் அம்மனூர் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் கொரோனா தொற்று வராமல் இருக்க, தங்களது கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்தனர்.
கோவிலில் சிறப்பு பூஜை செய்து ஆலயத்திலிருந்து தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று தீர்த்தத்தை தெளித்தனர். இப்படி செய்தால், கொரோனா நோய் தொற்று தங்களது கிராமத்திற்கு வராமல் தடுக்க முடியும் என்று நம்புவதாக கிராம மக்கள் கூறினர்.