PSBB பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் இன்று நேரில் ஆஜராக சம்மன்!
சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு புகார்கள் வரவே, அசோக் நகர் மகளிர் போலீசார் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து, இவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில் இன்னும் சிலர் சிக்குவார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜகோபாலன் வருகின்ற ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முஹம்மத் பரூக் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேற்று பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இவர்கள் வருகின்ற ஜூன் 4ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல் தியாகராயநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோரிடம் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் காலை 11 மணிக்கு பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.