குடியாத்தம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம், தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள வனப் பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் யானைகள் கூட்டம் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
குடியாத்தம் அடுத்த கதிர்குளம் பகுதியில், கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தது. அடிக்கடி இந்த சம்பவம் நடப்பதால் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்து வருகின்றனர்.
இதனையடுத்து, நேற்று மாலை முதல் கதிர்குளம் பகுதியில் கல்லப்பாடி காப்பு கட்டிலிருந்து வந்த ஒற்றை காட்டு யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
உடனடியாக இது குறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.