கொரோனா ஊரடங்கு - வெறிச்சோடி காணப்பட்ட திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவில் வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை.
மற்ற கால பூஜைகள் வழக்கப்போல் நடந்து வந்தன. முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாக நட்சத்திரம் வைகாசி மாததில் வரும் விசாக நட்சத்திர தினத்தன்று விசாக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், வைகாசி விசாக திருவிழா மே 17ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் விசாக திருவிழாவின் நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று விசாக திருவிழாவை முன்னிட்டு மூலவர், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் கோவில் வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் கடந்த ஆண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.