விசாகப்பட்டினத்தில் படகுகள் கவிழ்ந்து 8 பேர் மாயம் - ஒரு குழந்தை உடல் மீட்பு!
விசாகப்பட்டினம் சமீபத்தில் ஓடும் சில்லேரு நதியில் இரண்டு நாட்டு படகுகள் கவிழ்ந்து விழுந்து மூழ்கியதில் 8 பேர் மாயமாகி உள்ளனர். தற்போது ஒரு குழந்தையின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
ஒடிசாவிலிருந்து கூலித் தொழிலாளிகள் ஹைதராபாத்திற்கு வந்து வேலை செய்து வருகிறார்கள். தற்போது, தெலுங்கானாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்தனர்.
அப்போது, சாலை மார்க்கமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாது என்பதற்காக படகு மூலம் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று முடிவு செய்தனர்.
கூலித் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஹைதராபாத்திலிருந்து நேற்று இரவு சில்லேரு நதியை அடைந்து, அங்கிருந்து 2 படகுகள் மூலம் புறப்பட்டு சென்றனர். இரண்டு படகுகளில் தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் முதலில் சென்ற படகு நதியில் மூழ்க தொடங்கியது.
இதனையடுத்து நதியில் மூழ்கிய படகில் இருந்தவர்கள் நதியில் விழுந்து தத்தளித்துள்ளனர்.
பின்னால் வந்த படகில் தத்தளித்தவர்களை ஏற்ற முயற்சி செய்த போது, பாரம் தாங்காமல் அந்த படகும் நதியில் மூழ்கியது. படகுகள் மூழ்கியதில் 8 பேர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில், ஒரு குழந்தையின் உடல் மட்டும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.