திருமணமாகி 3 மாதம் ஆன கொரோனோ நோயாளி மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை
தண்டையார்பேட்டையில் கொரோனா நோயாளி மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (31). இவருக்கு கடந்த 19ம் தேதி கொரோனா நோய் தொற்று உறுதியானது. இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு நோய் தொற்று ஏற்பட்டதை எண்ணி கார்த்திக் வருத்தமடைந்தார். இதனையடுத்து, அவர் யாருக்கும் தெரியாமல் காலையில் தனது சிகிச்சை பெற்று வந்த அறையில் துப்பட்டாவை கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிகிச்சை அறையில் தூக்கில் தொங்கிய படி கார்த்திக் இறந்ததைக் கண்ட துப்புரவு பணியாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே மருத்துவரிடம் தெரிவித்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். பின்னர், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திக்கு திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.