அதிக லாபமீட்டி வந்த செர்ரி வகை தக்காளி : கொரோனா ஊரடங்கால் வீணாகி வரும் அவலம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் சீரான சீதோசன நிலை நிலவுவதால் ரோஜா, கேரட் உள்ளிட்ட பூ மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஒசூர் பகுதிகளில் தக்காளி நன்கு விளைகிறது என்றாலும் கடந்த 6 மாதங்களாக உரிய விலையின்றி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
வித்தியாசமாக யோசித்துள்ள ஓசூர் விவசாயிகள் செர்ரி வகை தக்காளிகளை விவசாயம் செய்து வருகிறார்.
இது வழக்கமான தக்காளியை விட அளவில் சிறியது. அடர் சிவப்பு நிறத்தில் செர்ரி பழம் போல் இருக்கும். திராட்சை பழம் போல் கொத்து கொத்தாகவும் நாட்டு தக்காளியை போன்றும் காய்க்கும்.
இனிப்பு சுவை அதிகமாகவும், புளிப்பு சுவை குறைவாகவும் இருக்கும். ஒரு தக்காளி 15 முதல் 20 கிராம் எடை கொண்டது. ஒரு எக்டேரில் 10 டன் சாகுபடி செய்யலாம்.
இந்த தக்காளியை சமையலுக்கு பயன்படுத்த முடியாது. அப்படியே சாப்பிடலாம் அல்லது காய்கறி, ப்ரூட் சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.
வைட்டமின் சி, பொட்டாசியம் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. புற்றுநோயை தடுக்கும் 'லைக்கோபீன்' சத்தும் உள்ளது. வீடுகளில், மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம்.
இந்த சிறிய ரக தக்காளிகள், சிவப்பு நிறத்தில் மட்டுமின்றி மஞ்சள், கருப்பு, சிகப்பு உட்பட பிற நிறங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. செர்ரி தக்காளி அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், இவற்றை ஸாஸ், கெச்சப், உணவு வகைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக செர்ரி வகை தக்காளியை கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்கி சென்றதால் ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்ததாகவும், கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வெளிநாட்டிற்கான ஏற்றுமதி தடை உள்ளிட்ட காரணங்களால் செர்ரி வகை தக்காளியை விற்க முடியாமலும், மற்ற வகை தக்காளிகளும் விலையில்லாத இந்த சூழலில் செர்ரி தக்காளி பறிக்காமலேயே தோட்டங்களில் வீணாகி வருகிறது.
ஒரு ஆண்டிற்கு மேலாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வரும் விவசாயிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.