ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு - கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு!

tamilnadu-samugam
By Nandhini May 24, 2021 06:34 AM GMT
Report

பூந்தமல்லியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்திலிருந்து பொருட்களை திருடிச் சென்றவர்கள் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் வெளியானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி, லட்சுமிபுரம் சாலையில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தவர்கள் சிலர் இங்கேயே தங்கி கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது, கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில், கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திலிருந்து அடிக்கடி பொருட்கள் திருடு போய் வந்தது.

இதைக் கண்டறிய அதன் உரிமையாளர் கண்காணிப்பு கேமராவை வைத்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கட்டிடத்திற்குள் வரும் சிறுவர்கள் கட்டிடத்தில் உள்ள விலை உயர்ந்த வயர்கள் ஆகியவற்றை அறுத்து எடுத்து செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜங்சன் பாக்ஸ் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்களையும் சிறுவர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பூந்தமல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறுவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு - கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு! | Tamilnadu Samugam