நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை - ககன்தீப் சிங் தொடங்கி வைத்தார்!

tamilnadu-samugam
By Nandhini May 24, 2021 05:18 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், காய்கறிகள், இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி மக்கள் பயன்பெறும் வண்ணம் வீடுகளைத் தேடி காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் முயற்சியை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

அந்த வகையில் வாகனங்கள் மூலம் தினசரி 18 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்களை வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. 4380 வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கு சென்று காய்கறி மற்றும் பழங்களை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை விற்பனையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தொடக்கி வைத்தார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது -

நடமாடும் காய்கறி விற்பனை செய்பவர்கள் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

தனிமனித இடைவெளியுடன் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய வேண்டும்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்பனை தடை விதிக்கப்படும்.

வியாபாரிகள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை - ககன்தீப் சிங் தொடங்கி வைத்தார்! | Tamilnadu Samugam