திருமண நாளில் 25 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள் வழங்கிய தம்பதி! நெகிழ்ச்சி சம்பவம்
தங்களது திருமண நாளை கொண்டாடும் வகையில் பாஸ்டர் ராஜேந்திரன் மற்றும் தீபா, 25 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள் வழங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பில்.எல்.தண்டா பகுதியைச் சேர்ந்த பாஸ்டர் ராஜேந்திரன். இவர் சேவா பாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், ஆசீர்வாத புதுவாழ்வு ஊழியங்களில் நிறுவனராகவும் உள்ளார். பாஸ்டர் ராஜேந்திரன் மற்றும் தீபா தங்களது திருமண நாளை கொண்டாடினர்.
திருமண நாளை கொண்டாடும் விதமாக சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான, 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினர்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு கொரனோ நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
இதனால், செங்கம் அடுத்த மேல் வணக்கம் பாடி இருளர் காலனி பகுதியில் வசித்து வரும் சுமார் 25 க்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஸ்டர் ராஜேந்திரன் மற்றும் தீபா தங்களின் திருமண நாளில் மளிகைப் பொருட்கள் கொடுத்தது அப்பகுதியில் உள்ள மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.