மதுரை, திருச்சியில் இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் 5 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
கோவை கொடிசியா வளாகத்தில் கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 820 படுக்கை வசதிகளையும், குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 360 படுக்கை வசதிகளையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார்.
அதனையடுத்து, மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேலத்தில் கொரோனா சிகிச்சை முன்னெடுப்புகளை ஆய்வு செய்து, அனைத்து வசதிகளுடன் 500 படுக்கைகள் கொண்ட புதிய மையத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிலையில், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இன்று முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.