கொரோனா சிகிச்சை மையமாக அமைக்கப்பட்ட ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் - மக்கள் கோரிக்கை
சென்னை திருநின்றவூரில் 10 மாதங்களாக கொரோனா சிகிச்சை மையமாக அமைக்கப்பட்ட ரயிலை உடனடியாக பயன்ப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னை திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக விரைவு ரயில் கொரோனா சிகிச்சை மையமாக அமைக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இதுவரை அந்த ரயிலை பயன்படுத்தப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது -
கொரோனா பரவலில் மக்கள் பாதிப்படைந்து சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆக்ஸிஜன் படுக்கை இல்லாமல் தனியார் கல்லூரிகள், மண்டபங்கள் போன்ற இடங்களை சிகிச்சை மையமாக மாற்றி, தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையமாக அமைக்கப்பட்டு ரயிலை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது.
தற்போது, தமிழகத்தில் உள்ள சூழலில், இந்த ரயிலை பயன்படுத்தினால் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கை குறையும். இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக கொரோனா சிகிச்சை மையமாக அமைக்கப்பட்ட ரயிலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.