ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலி!

tamilnadu-samugam
By Nandhini May 20, 2021 03:39 AM GMT
Report

ஓசூரில் கொரோனா தொற்றுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் ஜீவா, வசந்தா மற்றும் கலா. இவர்கள் 3 பேரும் சகோதரிகள். ஒருவருக்கு ஒருவர் அன்பும், பாசத்தோடு வாழ்ந்து வந்த இவர்கள் அதனை வெளிப்படுத்தும் விதமாக அப்பகுதியில் அடுத்தடுத்ததாக வீடுகள் கட்டி குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வசந்தா என்பவரின் மகன் லோகேஷ்க்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது. இவர் ஓசூரிலுள்ள பிரபல தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவரது உடல் நலத்தை விசாரிக்க சென்றதால் அக்கா, தங்கைகள் என மூன்று பேருக்கு அடுத்தடுத்து நோய் தொற்று பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசந்தா, கலா, ஜீவா ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இதில் லோகேஷ் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து நலமுடன் உள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த கலாவின் மகன் பாபு (40) என்பவரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஓசூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலி! | Tamilnadu Samugam