இராமநாதபுரத்தில் பனை மரங்கள் லட்சக்கணக்கில் வெட்டிச் சாய்ப்பு - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
இராமநாதபுரத்தில், பனை மரங்கள் செங்கல் சூளைக்கு விறகுக்காக லட்சக்கணக்கில் வெட்டி சாய்க்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், கடுகுசந்தைசத்திரம், பெரியகுளம், மேலச்செல்வனூர், காவாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு பனை மரங்கள் உள்ளன. இங்கு பனைத் தொழிலை நம்பி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நின்று பலன் தரக்கூடிய ஒரே மரம் கற்பகதருவான பனைமரங்கள். பனை மரத்தின் எந்த பகுதியும் வீணாவதில்லை. இதில் இருந்து கிடைக்கும் பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, நுங்கு, பனம்பழம் என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
ஆனால், தற்போது இங்குள்ள பனைமரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
பனை மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கவிதா, ஏற்கனவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, கடலாடி தாசில்தார் சேகர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள பனை மரங்களை வெட்ட தடை இருப்பதாகவும், பட்டா நிலங்களில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு முறையான அனுமதி கடிதம் பெற வேண்டும். பனை மரங்களை வெட்டுவது குற்றச் செயல் என்றார்.
மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
