கொரோனா விழிப்புணர்வு பாடல்களைப் பாடி வீடு வீடாக கிருமி நாசினி தெளித்து வரும் முதியவர்!
கொத்தங்குடி ஊராட்சியில் முதியவர் ஒருவர் தனது சொந்த செலவில் தினந்தோறும் வீடுவீடாக சென்று, கிருமி நாசினி தெளித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், கொரோனா குறித்து பாடல்களை பாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவரின் இந்தச் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
கீழ்கரை ஐவேலி பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பன்னீர்செல்வம் (68). இவர் விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
பொதுச்சேவை செய்வதில் மிகுந்த அக்கறைக்கொண்டவர். இவர் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மஞ்சள் தூள், துளசிப்பொடி, வேப்பிலைச்சாறு அடங்கிய கிருமிநாசினி நீரை ஸ்பிரேயர் மூலம் வேலம்புதுக்குடி, கொத்தங்குடி, பனங்குடி, அரும்பாக்கம், நெய்வாசல் உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தினந்தோறும் தெளித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் குறித்து பாடல்களைப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களைப் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வருகிறார்.
இது குறித்து பன்னீர்செல்வம் கூறுகையில், மக்கள் நலனுக்காக செலவு செய்கிறேன். தொடர்ந்து இப்பணியில் ஈடுபடுவேன். கடந்த ஆண்டும் கொரோனா தொற்றின்போது கிருமிநாசினி தெளித்தேன். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.