அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கடத்தல் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

tamilnadu--samugam
By Nandhini May 19, 2021 04:08 AM GMT
Report

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து, தனியார் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கடத்திச் செல்லப்படுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ராமநாதபரம் அரசு மருத்துவமனையில் 11 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு குழாய்கள் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர, பிற நோயாளிகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதிக விலை மற்றும் தட்டுப்பாடு காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல் தனியார் மருத்துவமனைகள் தவித்து வருகிறது. இதன்காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் இரவு நேரங்களில் ஆட்டோக்களிலும், மினி சரக்கு வாகனத்திலும் கடத்தி செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இரவு நேரங்களில் மருத்துவமனை 8-ம் நம்பர் ஆய்வகம் அருகில் உள்ள ஆக்சிஜன் வைப்பறையிலிருந்தும், மருத்துவமனை பகுதியில் உள்ள ஒரு தனிவார்டு பகுதிகளில் இருந்தும் இந்த சிலிண்டர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் சிலிண்டர்களுக்கு பதிலாக, காலி சிலிண்டர்கள் அதே வாகனத்தில் திருப்பி கொண்டு வந்து வைக்கப்படுகிறது.

இந்த சிலிண்டர்களை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதாக கணக்கு காட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனையில் எடுக்கப்படும் சளி பரிசோதனை இரவு நேரத்தில் கொண்டு வரப்பட்டு அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து அறிக்கை பெற்று தனியார் மருத்துவமனையில் கட்டணம் வசூலித்து கொள்வதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வரும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி, அதன் உண்மை தன்மையை கண்டறிந்து, இதுபோன்ற தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.