‘செல்பி மோகம்’- திடீரென நிலைத்தடுமாறி கூவத்தில் விழுந்து அலறிய இளைஞர்!
இன்று காலை சென்னை நேப்பியர் பாலத்திலிருந்து செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் திடீரென பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் தவறி விழுந்தார். கூவ ஆற்றில் விழுந்த அந்த இளைஞர் ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என்று சத்தமிட்டு அலறினார்.
இதைக் கேட்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த அண்ணாசதுக்கம் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் சில மணி நேரம் போராடி அந்த இளைஞரை பத்திரமாக கூவ ஆற்றிலிருந்து மீட்டனர்.
இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பெரியமேட்டைச் சேர்ந்த கார்த்தி என்பது தெரிய வந்தது. நேப்பியர் பாலத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது தான் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாகவும் அந்த இளைஞர் கூறினார். பின்னர், அந்த இளைஞருக்கு முதலுதவி அளித்த போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.