தக்காளி- பண்ணை பசுமை கடைகளில் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற மக்கள்

tamilnadu-rising-tomato-prices
By Nandhini Nov 25, 2021 05:28 AM GMT
Report

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னையில் சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.160-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், டியூசிஎஸ் பண்ணை பசுமை கடைகளில் நேற்று கிலோ ரூ.79-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டு தக்காளியை வாங்கிக் கொண்டு சென்றார்கள்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்கமாக வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய மழையைவிட அதிகமான மழை பெய்திருக்கிறது.

இதனால், இந்த 3 மாநிலங்களிலும் தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. இதனையடுத்து, தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. சென்னையில் கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளில் நேற்று கிலோ ரூ.160 வரை விற்பனையானது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் இயங்கி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம், தினமும் 15 டன் தக்காளியை கொள்முதல் செய்து ரூ.100-க்குள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, சென்னையில் டியூசிஎஸ் கூட்டுறவு சங்கம் சார்பில் நேற்று கிலோ ரூ.79-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. விலை மலிவாகக் கிடைப்பதால் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் உள்ளிட்ட 6 பண்ணை பசுமை கடைகள் மற்றும் ஒரு நகரும் கடை ஆகியவற்றில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தக்காளியை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். 

தக்காளி- பண்ணை பசுமை கடைகளில் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற மக்கள் | Tamilnadu Rising Tomato Prices