இந்தாண்டு வடகிழக்கு பருமழையால் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்
இந்தாண்டு வடகிழக்கு பருமழையால் புயல் உருவாகுமா? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் சூழ்ந்துள்ளது.
வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை வரும் 10-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
இந்த ஆண்டு அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அது புயலாக உருமாறவும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.
வரும் 10-ம் தேதி வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை, தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க இருக்கிறது. வரும் 15-ந்தேதி உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின் மையப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும்.
அப்போது தமிழகம் முழுவதும் வரும் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி இயல்பை விட அதிக அளவில் மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் ஒரு நிகழ்வு உருவாகும். அடுத்த மாதம் டிசம்பர் 20-ந் தேதி வரை மழை பெய்யும்.
டிசம்பர் மாதம் 25-ந் தேதி மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாக உள்ளது. அது ஒரு சிறு புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.