மருத்துவமனைக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த்தின் உடல் நலனை விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலன் விசாரித்தார்.
டெல்லியில் கடந்த 25ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், ரஜினிக்கு, 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. சென்னைக்கு திரும்பிய நடிகர் ரஜினி, தன் பேரக் குழந்தைகளுடன், அவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள, 'அண்ணாத்த' திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
திடீரென்று ரஜினிக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்ததில், இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்தநாளத்தில், கழுத்து பகுதியில் அடைப்பு இருந்தது தெரிய வந்தது.
நடிகர் ரஜினிக்கு, இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்தநாளத்தில், கழுத்து பகுதியில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் அவர் வீடு திரும்புவார்' என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சர் நேரில் சென்று ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.