நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜி
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில், பெரும் தேடலுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போலீசார் கைது செய்தனர். 3 வாரமாக தேடப்பட்டு வந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி போலீசார் கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இவரை தேடி வந்தது. இதற்கு முன்பு இவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.