அடடா மழைடா அட மழைடா: தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களில் கன மழை தொடரும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை (27ம் தேதி) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வரும் 28ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் அதி கனமழையும், 29ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் அதி கனமழையும்,
30ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் அதி கனமழையும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.
இன்று முதல் 30ம் தேதி வரை கேரளக் கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதி உள்ளிட்ட இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.