நாம் தமிழர் தம்பிகள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவி செய்க – சீமான் வேண்டுகோள்

tamilnadu-rain-siman
By Nandhini Nov 08, 2021 05:46 AM GMT
Report

நாம் தமிழர் தம்பிகள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் புரிய உடனடியாக களப்பணியாற்ற முன்வர வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால், பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் ஓடுகிறது. வீடுகளிலும், மழைநீர் புகுந்துள்ளது.

சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத பெருமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள சென்னை மாநகரில் வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ள நீரினை விரைந்து அகற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தற்காலிக உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்ய வேண்டும்.

மேலும் மின்சாரம் மற்றும் குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் உடனடியாக கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென சென்னை மாநாகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின்போதும் தன்னார்வலர்களாக முதலில் களத்தில் இறங்கி உதவி புரியும் நாம் தமிழர் தம்பிகள் தற்போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் புரிய உடனடியாக களப்பணியாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அதே சமயம், அன்பு தம்பி தங்கைகள் முதலில் தங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துகொண்டு, மிக கவனமாக மக்கள் சேவையாற்ற வேண்டுமெனவும் அன்புடன் அறிவுறுத்துகிறேன்”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.