சென்னையில் மெட்ரோ ரயில் இரவு 11மணி வரை இயக்கப்படும் - முக்கிய அறிவிப்பு
சென்னை மெட்ரோ சேவைகள் இன்று இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டு நாள் முழுவதும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் கனமழை காரணமாக சாலைகளிலும், வீடுகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மோட்டார் மூலம் நீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கனமழையால், சென்னையிலிருந்து நேற்று செல்ல வேண்டிய ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அத்துடன் கனமழையால் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
கனமழை காரணமாக தமிழக அரசு விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை கால அட்டவணையின்படி காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டு நாள் முழுவதும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மேற்கண்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று ஒரு நாள் மட்டுமே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.