தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 3 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் நேற்று லேசான மழை பெய்ய தொடங்கிய நிலையில் மதியம் 2 மணியளவில் மழை தீவிரம் அடைய ஆரம்பித்தது. இதனையடுத்து, சில மணிநேரங்களில் பெய்த திடீர் தொடர் மழையால் சாலைகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அலுவலகத்திலிருந்து பலரும் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அதேசமயம் நகர் முழுவதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் வாகனங்கள் நகரமுடியாமல் மணிக்கணக்கில் ஸ்தம்பித்துப் போனது. கெங்குரெட்டி, ரெங்கநாதன், ஆர்பிஐ, மேட்லி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மழை தொடரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.