அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் 12 கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி மழை பெய்யாததால் அந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் தமிழகத்தில் மழை நீடிக்கும். அதேபோல், வங்கக்கடலில் இன்று உருவாகும் என அறிவிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, தாமதமாக நாளை உருவாகும் என்று கூறப்பட்டது.
அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். ஆனால் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
இந்நிலையில், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை- செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது.
இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இதனால், 2 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிவு இருக்கும்.
நாளை (30.11.21) கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும், தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யும்.
அதேபோல், புதன்கிழமை (01.12.21) அன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் இருக்குமெனவும், (02.12.21) வியாழக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது