கனமழையால் இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவிப்பு
கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாலைகளிலும், வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்திருக்றிர்.
இது குறித்து அவர் பேசுகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று இரவுக்குள் அனைத்து நிலைமையும் சீராகிவிடும். தமிழகத்தில் பெய்த கனமழையால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.