தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

tamilnadu-rain-delta
By Jon Jan 05, 2021 01:00 PM GMT
Report

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, நேற்று (ஜன.04) நள்ளிரவு முதலே சென்னையின் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரித்திருப்பதன் காரணமாக, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஜன.05) தெரிவித்துள்ளார்.

சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும், புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை (ஜன.06) நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவியரசன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக, சென்னை, மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.