தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - 'காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
நாளை (ஜன.01) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவு வாய்ப்பு இருக்கிறது. ஜன.02 அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
ஜன.03, ஜன.04 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.