தொடர் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

heavy rain school leave tamilnadu-rain
By Nandhini Nov 29, 2021 03:18 AM GMT
Report

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -

குமரிக்கடல் மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அத்துடன் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுகிறது.

மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்பதால் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக இன்று தென்காசி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சேலம் ,அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு | Tamilnadu Rain